வெலிகம கடற்பரப்பில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இன்று (13) அதிகாலை குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு என்பன இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்ற பலநாள் படகில், குறித்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


சிறிய படகுகள் மூலம், கரைக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டபோது, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.எரிவாயு கொள்கலன்கள் மற்றும் சாக்குப் பைகள் என்பனவற்றில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைத்து, குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 6 பேர் படகில் பயணித்தவர்கள் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.